துப்பாக்கி தாங்க இயலாத 63 எல்லை அதிகாரிகளை குறைந்த ஊதியப் பணிகளுக்கு மாற்ற நடவடிக்கை
கனடா எல்லை சேவை நிறுவனம் (Canada Border Services Agency, CBSA), மருத்துவக் காரணங்களால் கைத்துப்பாக்கி தாங்க முடியாத 63 ஊழியர்களை ஊதியப் பாதுகாப்பின்றி குறைந்த சம்பளப் பதவிகளுக்கு மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளது. நிரந்தர பணியிட அனுசரிப்பு ஏற்பாடுகள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்ற சர்ச்சையை இது ஏற்படுத்தியுள்ளது.
தற்காலிக மருத்துவக் கட்டுப்பாடுகளுக்கு அனுசரிப்பு வழங்க முடியும் என்றும், ஆயுதப் பதவியின் அத்தியாவசிய நிபந்தனையை நிரந்தரமாக நிறைவேற்ற முடியாதவர்கள் வேறு பணிக்குச் செல்ல வேண்டும் என்றும் நிறுவனம் வேறுபடுத்துகின்றது. பேச்சாளர் கெல்லி கமரன் (Kelly Cameron), ஊழியர்களுக்கு உதவுவதுடன் பொதுநிதியைப் பொறுப்புடன் பயன்படுத்தவும் வேண்டும் என்றும், தேவையற்ற பணியை உருவாக்கவோ அத்தியாவசிய கடமையை நிரந்தரமாக நீக்கவோ நிறுவனம் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
சுங்க மற்றும் குடிவரவு தொழிற்சங்கத் தலைவர் மார்க் வெபர் (Mark Weber), நடைமுறையை நியாயமற்றதும் பாகுபாடானதுமாக விமர்சித்தார். நெக்சஸ் விண்ணப்பங்கள் (Nexus), விமானப் பயணிகள் பட்டியல் ஆய்வு, பயிற்சி, சில விமான நிலைய மற்றும் தபால் நிலையப் பணிகள் உள்ளிட்ட அனைத்துக்கும் துப்பாக்கி தேவையில்லை எனச் சங்கம் கூறுகின்றது. அதிகாரிகள் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை துப்பாக்கித் தகுதியைப் புதுப்பிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட 63 பேர், துப்பாக்கி தாங்க வேண்டிய 8,500 பதவிகளில் சுமார் 0.7 சதவீதமாகும். மருத்துவ விடுப்பிலுள்ள மேலும் 14 பேரின் நிலை ஆய்விலுள்ளது; ஜனவரி முதல் 36 பேர் முன்னைய அனுசரிப்பை இழப்பதற்குப் பதிலாக ஓய்வு பெற்றுள்ளனர். துப்பாக்கி தொடர்பான அனுசரிப்பு பெற்ற 190 பேரில் 27 பேர் அதே மட்டப் பணிகளுக்கு மாற்றப்பட்டதுடன், 50 பேர் மருத்துவ அனுமதிக்குப் பின்னர் வழமையான பணிக்குத் திரும்பியுள்ளனர்.
நிறுவனத்தில் மொத்தம் சுமார் 18,000 ஊழியர்கள் உள்ளனர். தடைசெய்யப்பட்ட பொருட்களைத் தடுத்தல் மற்றும் குடிவரவுச் சட்ட அமுலாக்கம் முன்னணிக் கடமைகளாகும். நாடளாவிய அளவில் அதிகாரிகள் ஆண்டுக்கு சராசரியாக 28 தடவைகளே துப்பாக்கியை வெளியே எடுப்பதாகக் கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய மட்டத்தில் ஏற்ற பணியிடங்கள் இனி இல்லை என்றும், குறைந்த மட்ட வாய்ப்புகள் வரும் வாரங்களில் பகிரப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.