குப்பையை எரித்து மின்சாரம் தயாரிப்பதை விரிவாக்க ஒன்ராறியோவில் விவாதம்
அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் குப்பை நிரப்பு நிலங்களின் கொள்ளளவு தீரலாம் என்ற கணிப்புகளுக்கு மத்தியில், புதிய நிரப்பு நிலங்களையும் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் (waste-to-energy) ஆலைகளையும் ஊக்குவிக்கும் மாற்றங்கள் ஒன்ராறியோவின் சட்டமூலம் 140இல் இடம்பெற்றுள்ளன. புதிய திட்டங்கள் தற்போது அரசிடம் இல்லை என்றும் தனியார் முன்மொழிவுகளை வரவேற்பதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சர் டொட் மெக்கார்த்தி (Todd McCarthy) கூறியுள்ளார்.
ஆண்டுக்கு மூன்று மில்லியன் தொன்னுக்கும் அதிகமான குப்பையை ஒன்ராறியோ அமெரிக்காவுக்கு அனுப்புகின்றது. அதற்கு தற்போது 50 சதவீத அமெரிக்க வரி விதிக்கப்படுகின்றது. புதிய குப்பை நிரப்பு நிலங்களுக்கு நகராட்சிகள் விதிக்கக்கூடிய மறுப்புரிமையையும் சட்டமூலம் நீக்கும். இது எரிப்பாலைகளுக்கும் பொருந்துமா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
284 மில்லியன் டொலரில் அரச-தனியார் பங்காண்மையில் உருவான டர்ஹாம் யோர்க் எரிசக்தி நிலையம் (Durham York Energy Centre) 2016இல் திறக்கப்பட்டது. ரீவேர்ல்ட் (ReWorld) நிறுவனத்துடன் இயக்கப்படும் இது மாகாணத்தின் இரண்டு கழிவு எரிப்பாலைகளில் ஒன்றாகும். நாளுக்கு சுமார் 35 லொறிகள் கழிவை வழங்குகின்றன. ஆண்டுக்கு 140,000 தொன் கழிவைச் செயலாக்கி சுமார் 10,000 வீடுகளுக்கான மின்சாரத்தை உருவாக்குவதுடன் உலோகங்களையும் மீட்கின்றது.
வெளியேற்றங்கள் சுத்திகரிக்கப்பட்டு தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதாகவும் தரவுகள் உடனுக்குடன் வெளியிடப்படுவதாகவும் இயக்குநர்கள் கூறுகின்றனர். கழிவைக் குறைத்தல், மீள்பயன்பாடு, மறுசுழற்சி ஆகியவற்றுக்குப் பின்னரே எரிப்பு இடம்பெறுவதாக அவர்கள் விளக்குகின்றனர். கழிவின் கனஅளவு 90 சதவீதம் வரை குறைந்தாலும், எஞ்சும் சாம்பல் சாதாரண அல்லது அபாயக் கழிவு நிலையங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் கரென் விர்சிக் (Karen Wirsig), எரிப்பு தீங்கு விளைவிக்கும் மாசுகளையும் பசுமைக்குடில் வாயுக்களையும் உருவாக்கி மீள்பயன்பாட்டுக்கான ஊக்கத்தைக் குறைப்பதாகக் கூறுகின்றார். பசுமைக் கட்சித் தலைவர் மைக் ஷ்ரைனர் (Mike Schreiner), மறுசுழற்சி, திருத்தம், உரமாக்கல் குறைந்த செலவில் அதிக வேலைவாய்ப்பை வழங்கும் என்கிறார். டர்ஹாம் ஆலைக்கு எப்போதும் சமூக ஆதரவு இருந்தது என்ற கருத்தையும் அவர் மறுக்கின்றார்.
யோர்க் பல்கலைக்கழகத்தின் (York University) கல்வின் லகான் (Calvin Lakhan), தொழில்நுட்பம் மேம்பட்டிருப்பினும் சுகாதாரக் கவலைகள் கவனிக்கப்பட வேண்டும் என்கிறார். சட்டமூலம் இரண்டாம் வாசிப்பைக் கடந்துள்ளதுடன் வரும் வாரங்களில் நிறைவேறலாம். தனியாக, டர்ஹாம் யோர்க் நிலையம் ஆண்டுக்கு மேலும் 20,000 தொன் கழிவைச் செயலாக்க விண்ணப்பித்துள்ளது.