கனேடிய வைன் உற்பத்தியாளர்களுக்கு சுமார் 177 மில்லியன் டொலர் மத்திய உதவி
வைன் துறை ஆதரவுத் திட்டத்தை (Wine Sector Support Program) மூன்று ஆண்டுகளுக்குப் புதுப்பிப்பதற்காக வழங்கப்படும் சுமார் 177 மில்லியன் கனேடிய டொலர் உதவியை உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர். ஏற்றுமதித் தடைகள், காலநிலைச் சேதங்கள், வெளிநாட்டுப் போட்டி ஆகியவற்றைச் சமாளிக்க நிலையான நிதி தேவைப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
நயாகராவிலுள்ள ஜாக்சன்-ட்ரிக்ஸ் தோட்டத்தில் (Jackson-Triggs Niagara Estate Winery) விளையாட்டுத்துறை இராஜாங்கச் செயலாளர் அடம் வான் கூவர்டன் (Adam van Koeverden) அறிவிப்பை வெளியிட்டார். திருப்பிச் செலுத்தத் தேவையற்ற மானியங்களை வழங்கும் திட்டம் 2022இல் ஆரம்பிக்கப்பட்டது. உலக வர்த்தக அமைப்பின் (WTO) தீர்ப்பைத் தொடர்ந்து முழுமையான கனேடிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட வைனுக்கான கலால் வரிவிலக்கு நீக்கப்பட்ட பின்னர் இது அறிமுகமானது.
வைன் குரோவர்ஸ் ஒஃப் கனடா (Wine Growers of Canada) தலைவர் டெல் ரொலோ (Del Rollo), வரிவிலக்கு நீக்கத்தால் ஆண்டுக்கு 60 முதல் 70 மில்லியன் டொலர் வரை திட்டமிடப்படாத கூடுதல் வரிச்செலவு ஏற்பட்டதாக மதிப்பிடுகின்றார். அமெரிக்க இறக்குமதித் தடையால் அங்கும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்கிறார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் (British Columbia) காட்டுத்தீயும், நயாகரா-ஒன்-த-லேக் (Niagara-on-the-Lake), லிங்கன் (Lincoln), செயின்ட் கத்தரின்ஸ் (St. Catharines) பகுதிகளில் இந்தக் கோடையில் ஏற்பட்ட வெள்ளமும் உற்பத்தியாளர்களைப் பாதித்துள்ளன. கனேடிய வைன் சந்தையில் இறக்குமதிக்கு 70 சதவீதப் பங்கு இருப்பதாகவும், இறக்குமதி வைன்களில் 92 சதவீதம் வரியின்றி நுழைவதாகவும் துறை அமைப்பு கூறுகின்றது. வெளிநாட்டு அரச மானியங்களும் போட்டி அழுத்தத்தை அதிகரிப்பதாக அது வாதிடுகின்றது.
மே மாதம் வெளியான டிலாய்ட் (Deloitte) ஆய்வு, கனேடிய வைன் துறையின் பெறுமதியை 10.1 பில்லியன் டொலராகவும் அது ஆதரிக்கும் வேலைவாய்ப்புகளை 100,000 ஆகவும் மதிப்பிட்டது. தற்போதைய சுமார் 30 சதவீத உள்நாட்டுச் சந்தைப் பங்கு 51 சதவீதமாக உயர்ந்தால் மேலும் 3.6 பில்லியன் டொலர் பொருளாதாரச் செயற்பாடு உருவாகலாம் என ஆய்வு கணித்தது.
செயின்ட் கத்தரின்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிட்டில் (Chris Bittle), புதுப்பிக்கப்பட்ட உதவி உற்பத்தி மேம்பாடுகளில் முதலீடு செய்வதற்கான நம்பிக்கையை வழங்கும் என்றார். கனேடியப் பொருட்களை வாங்கும் ஆர்வம் அதிகரிப்பதில் வாய்ப்பு இருப்பதாக ரொலோ கருதினாலும், நிலையான விற்பனையாக அதனை மாற்றும் காலத்தில் உதவித் திட்டம் முக்கியம் என்கிறார்.